காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வடக்கு, தெற்கு என்ற பேச்சு அந்தக்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தலைமைக்கு எதிராகக் கடிதம் எழுதிய மூத்த 23 அதிருப்தி தலைவர்கள் ஒன்று சேர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் வயநாடு தொகுதிக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொண்ட எம்.பி. ராகுல் காந்தி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் " கடந்த 15 ஆண்டுகளாக நான் வடமாநிலத்தில் எம்.பி.யாக இருந்தேன். வித்தியாசமான அரசியலைப் பழகினேன். ஆனால், கேரளாவுக்கு வந்தபின், எனக்கு திடீரென புத்துணர்ச்சியாக இருக்கிறது.இங்குள்ள மக்கள் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துகிறார்கள், அதைப்பற்றி பேசுகிறார்கள், தெளிவாக இருக்கிறார்கள்.
நான் அமெரிக்காவில் இருக்கும் சில மாணவர்களுடன் பேசினேன், நான் கேரளாவில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனத் தெரிவித்தேன். இது வெறும் ஈர்ப்பு அல்ல, நீங்கள் அரசியல் செய்யும் வழி, உங்கள் அரசியலில் இருக்கும் புத்திசாலித்தனம். இது எனக்கு கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் வடமாநில எம்.பி. தென்மாநில எம்.பி. என்ற பேச்சுதான் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, கபில் சிபல் ஆகியோர், தங்களின் கருத்துக்களையும், அதிருப்திகளையும், காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனந்த் சர்மா கூறுகையில் " ராகுல் காந்தியின் பேச்சைக் கவனித்தேன், அது அவரின் தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம். ஆனால், நாட்டின் எந்தப் பகுதியையும் பிரித்துப் பேசவோ அல்லது அவமதிக்கவோ கூடாது. எந்த அடிப்படையில் அவர் பேசியிருந்தாலும், அதை அவர் விளக்கி தவறான புரிதல்களை நீக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நாட்டை பிரிக்கும் வேலையில் ஒருபோதும் ஈடுபடாது. நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியம். வடஇந்தியா அதிகமாகப் பங்களிப்புச் செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.
கபில் சிபல் கூறுகையில் " ராகுல் காந்தி என்ன கூறினாரோ அதற்கு அவரே விளக்கம் அளிக்கலாம். நான் கூறுவதெல்லாம் வாக்காளர்கள் புத்திசாலியானவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை நாம் மதிக்க வேண்டும் அந்த வாக்காளர்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள், அதிகாரத்தில் அமர வைத்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பயணிக்கும் நேரத்தில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களான 23 பேரும் ஜம்முவில் சனிக்கிழமை ஒன்று சேர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் குளோபல் காந்தி அறக்கட்டளை சார்பில் ஜம்முவில் 3 நாட்கள் பயணத்தில் பங்கேற்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் இந்த 23 தலைவர்களும் ஒன்று சேர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கபில் சிபல், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, பூபேந்தர் சிங் ஹூடா, மணிஷ் திவாரி, உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும், ராகுல் காந்தி எடுக்கும் முக்கிய முடிவுகளும், பேச்சும் அதிருப்தி தலைவரக்ளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் கூடும் இந்தத் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
அதிருப்தி தலைவர்கள் அமைக்கும் ஆலோசனைக் கூட்டம், செயல்பாடுகள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சித் தலைமை தீவிரமாக கவனித்து வருகிறது, இதுவரை அவர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.