இந்தியா

அயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கு 250 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.

அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகளை அறக்கட்டளை பெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் நிதி திரட்டி வருகின்றன. கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்தநிலையில் அயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதனை லக்னோவில் இன்று தெரிவித்தார்.

அவர் கூறுகையில் ‘‘அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. பிரமாண்டமாக இந்த விமான நிலையம் அமையும். இதற்கான செலவுக்காக முதல்கட்டமாக மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT