கரோனா காலத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. படிப்படியாகப் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறுகிய தூரம் மட்டுமே பயணிக்கும் பயணிகள் ரயிலில் கட்டணம் அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சக செய்திக்குறிப்பில், ''கோவிட் வைரஸ் இன்னும் நம்மைச் சுற்றி உள்ளது. சில மாநிலங்களில் அதன் தீவிரம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் பயணங்களைத் தவிர்க்கவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் பயணிப்பர். ரயில்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். அந்த வகையில் கோவிட்-19 பரவல் தடுக்கப்படும்.
இந்தியன் ரயில்வே, படிப்படியாகப் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து ரயில்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.