இந்தியா

‘‘குஜராத் மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள்; பாஜகவுக்கு நடுக்கம் வந்து விட்டது’’-  கேஜ்ரிவால் கடும் சாடல்

செய்திப்பிரிவு

குஜராத் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி பாஜகவினருக்கு நடுக்கத்தை வரவழைத்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றது.

இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 451 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அசாதுதீனின் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 வார்டுகளை கைபற்றியுள்ளது. ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் ஆம் ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சூரத் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று சூரத் வந்தார். வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கவுன்சிலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:

குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கடந்த சில தினங்களாகவே பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகளை கவனித்து வருகிறேன். அவர்களுக்கு பயம் வந்து விட்டது. நடுக்கத்தில் உள்ளனர்.

அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை பார்த்து மட்டும் பயப்படவில்லை. நமக்கு வாக்களித்த மக்களை பார்த்தும் பயப்படுகிறார்கள். இது ஒரு தொடக்கம் தான். 25 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரும் பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையே நமது வெற்றி உறுதி செய்துள்ளது. அவர்கள் இதுவரை எதுவுமே செய்யவில்லை. மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள். நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT