தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக் காலம் வரும் மே மாதத்துக்குள் முடிவதால், இந்த 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது.
5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பதற்றத்துக்குரிய வாக்குப்பதிவு மையங்கள், பாதுகாப்பு வசதிகள், வாக்காளர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநிலத் தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிவிட்டனர். இதன் அடிப்படையில் எத்தனை கட்டங்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த முறை 8 கட்டங்களாக நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பணிக்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாதுகாப்புப் பணிக்காகத் துணை ராணுவப் படையினர், மத்திய ஆயுதப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி மேற்கு வங்கத்துக்கு மட்டும் 125 கம்பெனிப் படைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இப்போதே தேர்தல் பரபரப்பு தொற்றியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல தமிழகம், கேரளா ஆகியவற்றிலும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டு கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்துக்குத் தேர்தலையொட்டி இதுவரை பிரதமர் மோடி இருமுறை வந்து பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கப் போராடி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இரு நாட்கள் பயணம் செய்து பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.
இந்தச் சூழலில் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி குறித்து இன்று மாலை தேர்தல் ஆணையம் விரிவான அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.