இந்தியா

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

டெல்லியில் விவசாயக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

விவசாயிகளின் போராட்டத்தை மிகுந்த கவனத்துடனும், உணர்வுப்பூர்வமாகவும் மத்திய அரசு அணுகி வருகிறது. அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 11 கட்ட பேச்சுவார்த்தைகளை அரசு நடத்தியுள்ளது. ஆனால், புதிய வேளாண் சட்டங்களில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அவர்கள் கூறவே இல்லை. அதுமட்டுமின்றி, வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் அரசின் முடிவு குறித்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால்தான் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது. முதலில், அரசின் முடிவு தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை விவசாய சங்கங்கள் தெரிவிக்க வேண்டும். பின்னர்தான், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

SCROLL FOR NEXT