மகாராஷ்டிராவின் புனே நகரைச்சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் தயாரிக்கும் கேவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஜனவரி தொடக்கத்தில் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 16-ம்தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 1.35 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய கரோனா தடுப்பூசிகள்பாதுகாப்பானவை, நம்பகமானவை. இதன் காரணமாகவே இந்திய தடுப்பூசிகளை வெளிநாடுகள் அதிகம் விரும்புகின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனாதடுப்பூசிகள் ஏராளமான நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சில நாடுகளுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. சில நாடுகள் விலை கொடுத்து வாங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இந்திய கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சுய சார்பு இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு உதாரணமாகும்.
பல்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.