கடந்த 3 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள் சாமானிய மக்களை உயர்ந்த பணவீக்கத்தில் தள்ளுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசைச் சாடியுள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி, கடந்த 12 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின.
இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தானில் பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100க்கு மேல் அதிகரித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.88க்கு மேல் சென்றது.
இதனிடையே இந்த மாதத்தில் மட்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக இன்று சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், "கடந்த 3 மாதத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே 100 ரூபாயை எட்டிவிட்டது. மோடி அரசின் செயல்பாடுகள் பொருளாதாரத்தில் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருக்கிறது. ஆனால், சாமானிய மக்களை உயர்ந்த பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தள்ளுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். நாட்டில் ஒவ்வொரு குடிமகனும், இந்த விலைவாசி உயர்வால் அதிருப்தியில் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.