ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகரில் பள்ளி லிப்டில் சிக்கி ஸ்யேதா சைனாப் பாத்திமா ஜாஃப்ரி என்ற 3 வயது சிறுமி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியானரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஸ்டார் கிட்ஸ் பிரிமியம் ஸ்கூலில் படித்து வரும் பாத்திமா ஜாஃப்ரி செவ்வாய்க் கிழமை காலை பள்ளி பிரேயர் முடிந்து வகுப்புக்குச் செல்லும் போது லிப்டில் சிக்கி பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாத்திமா ஜாஃப்ரியின் தந்தை சையத் அய்ஜாஸ் ஹுசைன் இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். தாயார் ஸ்யேதா தஸீன் ஸைதி ஆவார்.
நேற்று தன் வகுப்பில் படிக்கும் தன் உறவினர் மிர் இக்பால் அலி ஸைதியுடன் காலை 8.30 மணிக்கு பள்ளி பேருந்தில் பள்ளி வந்தடைந்தார் சிறுமி பாத்திமா. ஆனால் 9.45 மணிக்கெல்லாம் பாத்திமாவின் தாத்தா எஸ்.எச்.ஸைதிக்கு பள்ளியிலிருந்து அவசர அழைப்பு வந்தது.
அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, "நாங்கள் பள்ளிக்கு விரைந்த போது பாத்திமாவின் தலை லிப்டுக்கும் முதல் தளத்துக்கும் இடையே சிக்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். அதன் பிறகு பாத்திமா உடல் லிப்டிலிருந்து மீட்கப்பட்டது" என்றார்.
சம்பவ இடத்தில் தீயணைப்புப் படை வீரர் ஒருவரும், சில பெற்றோர்கள் மட்டுமே இருந்தனர். பள்ளியின் லிப்ட் ஊழியர் சம்பவத்தையடுத்து தலைமறைவாகி விட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுமியின் பரிதாப மரணத்தை அடுத்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் ஒருவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த 9 மணி முதல் 10 மணி வரை லிப்டில் இரு தளங்களுக்கு இடையே சிறுமியின் உடல் சிக்கியிருந்திருக்கிறது. தாய் மற்றும் தாத்தா ஆகியோரின் கதறல்களுக்கிடையே சிறுமியின் உடல் லிப்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நகரும் லிப்டில் சிறுமி சிக்கியதன் மர்மம் என்னவென்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரேயர் முடிந்த பிறகு பாத்திமாவுடன் 8 மாணவர்கள் முதல் தளத்துக்கு உள்ள வகுப்பறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக பிரின்சிபால் விசாரணையின் போது தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை விசாரித்து வரும் டிசிபி ஏ.ரவீந்தர் கூறும் போது, லிப்டின் கிரில் சரியாக மூடப்படவில்லை. இதனால் சிறுமி லிப்டிலிருந்து நழுவி விழுந்து சிக்கியிருக்கலாம்" என்று கூறினார்.
ஆஸ்மேனியா பொதுமருத்துவமனை சவக்கிடங்கில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது, காரணம், சிறுமியின் குடும்பத்தினர் பிரேதப் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அங்கு கூடியிருந்த பெரியவர்கள் அவர்களை பிரேதப் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தனர்.