கோவிட் மேலாண்மை நடவடிக்கைகளில் பல மாதங்களுக்கு பிறகு கண்ட பலனை இழக்காமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகி யவற்றில் கொவிட் மேலாண்மைக்கு உதவவும், தொற்றை திறம்பட சமாளிக்கவும் உயர்நிலை ஒழுங்கு குழுவை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
3 உறுப்பினர்கள் அடங்கிய உயர்நிலை ஒழுங்கு குழுவுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின், இணைச் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் தலைமை வகிப்பர்.
இந்த குழுக்கள், கோவிட் தொற்று அதிகரித்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்பட்டு, தொற்று அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறியும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், இந்த உயர்நிலை குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
இந்தக் குழுவினர் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் அதிகாரிகளிடம் பேசி, அங்குள்ள நிலவரத்தையும், சவால்களையும் அறிந்து கொள்வர்.
மாநில பயணத்தை முடித்தபின், சிறப்பு குழுவினர் சந்தித்து பேச சம்பந்தப்பட்ட மாநில தலைமை செயலர்கள் நேரம் ஒதுக்கும்படி 10 மாநிலங்களின் தலைமை செயலாளர்களையும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவிட் மேலாண்மை நடவடிக்கைகளில் பல மாதங்களுக்கு பிறகு கண்ட பலனை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தீவிர ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தும்படியும், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் படியும், தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைபடுத்தும் படியும், அவர்களின் தொடர்புகளை தாமதமின்றி கண்டறியும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.