தமிழக அரசின் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வழியாகக் குண்டாற்றுடன் இணைக்கும் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார். ரூ.6,941 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தால் கரூர், திருச்சி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு கர்நாடக மாநில விவசாய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உடனடியாக மத்திய அரசிடம் பேசி காவிரிகுண்டாறு இணைப்பு திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறும்போது, ‘‘தமிழக அரசு இந்த திட்டத்தின் மூலம் காவிரி ஆற்றில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக 45 டிஎம்சி நீரை எடுக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிரான இந்த திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தின் இந்த முயற்சிக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்''என்றார்.
இதே போல முன்னாள் முதல்வரும், மஜத மூத்த தலைவருமான குமாரசாமி கூறும்போது, ‘‘காவிரி ஆற்றில் இருந்து கூடுதல் நீரை பயன்படுத்தவே தமிழகம் இந்த திட்டத்தை வகுத்துள்ளது. கர்நாடகாவின் நலனுக்கு எதிரான இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கியுள்ளது. கர்நாடகாவில் மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில், தமிழகத்தின் திட்டத்துக்கு அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவல் கூடகர்நாடக அரசுக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது'' என்றார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ‘‘காவிரியில் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு கர்நாடகா அனுமதிக்காது. இந்த விஷயத்தில் வெறுமனே பேசி அரசியல் செய்வது விவசாயிகளுக்கு பயன் தராது. எனவே சட்ட முறைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கர்நாடகாவின் நலன்கள் பாது காக்கப்படும்" என்றார்.