இந்தியா

‘‘பாஜகவின் கோட்டை உடைந்தது; சூரத்தில் 8 இடங்களில் வெற்றி’’ - ஆம் ஆத்மி குதூகல ட்வீட்

செய்திப்பிரிவு

பாஜகவின் கோட்டை உடைந்தது, சூரத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசம் இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் ரூபானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

இந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 236 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 49 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

இந்தநிலையில் சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 இடங்களில் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டவற்றில் பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில் சூரத்தில் 8 இடங்களை கைபற்றியதாக ஆம் ஆத்மி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாஜகவின் கோட்டையை உடைத்தது ஆம் ஆத்மி. சூரத்தில் தற்போதைய நிலையில் 8 இடங்களில் வெற்றி. குஜராத்தின் மற்ற இடங்களிலும் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. கேஜ்ரிவாலின் ‘டெல்லி மாடல்’ குஜராத்தில் நம்பிக்கை அளிக்கிறது.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT