அபிஷேக் பானர்ஜி இல்லத்திலிருந்து இன்று காலை மம்தா பானர்ஜி புறப்பட்டுச் சென்ற காட்சி: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

நிலக்கரி ஊழல் வழக்கு: மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம் சிபிஐ விசாரணை

பிடிஐ

நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருச்சிராவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள ஹரிஸ் முகர்ஜி சாலையில் அபிஷேக் பானர்ஜி இல்லம் உள்ளது. இன்று காலை முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி இல்லத்துக்கு வந்திருந்தார். மம்தா பானர்ஜி புறப்பட்ட சில நிமிடங்களில் சிபிஐ அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜி இல்லத்துக்கு வந்தனர்.

நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடைய அனுப் மஜ்ஹி என்ற லாலா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டபின், கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

மம்தா பானர்ஜி சென்றவுடன் சிபிஐ அதிகாிகள் அபிஷேக் இல்லத்துக்கு வந்த காட்சி

இதில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருச்சிரா பானர்ஜி, அவரின் தங்கை மேனகா காம்பிர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ருச்சிரா பானர்ஜி, அவரின் தங்கை மேனகா காம்பிர் இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் ருச்சிராவின் தங்கை மேனகா காம்பிரின் இல்லத்துக்கு நேற்று சிபிஐ பெண் அதிகாரிகள் இருவர் சென்று விசாரணை நடத்தினர். ஏறக்குறைய 3 மணி நேரம் விசாரணை நீடித்தது.

இதற்கிடையே சிபிஐ அனுப்பியிருந்த நோட்டீஸுக்கு பதில் அனுப்பிய ருச்சிரா பானர்ஜி, நாளை (இன்று) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் என் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதன்படி, சிபிஐ அதிகாரிகள் இன்று காலை ருச்சிரா பானர்ஜியின் இல்லத்துக்குச் சென்று நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான், முதல்வர் மம்தா பானர்ஜி ருச்சிரா பானர்ஜியின் இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT