இந்தியா

தொலைபேசி உரையாடல் பதிவில் இருப்பது ஹர்திக் குரல்தான்: தடயவியல் பரிசோதனையில் உறுதி

பிடிஐ

தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள, ஹர்திக் படேலின் குரலும், காவல் துறையால் இடைமறித்து பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளில் உள்ள குரலும் ஒன்றாக இருப்பதாக தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.

குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹர்திக் படேல்(22) உள்ளிட்ட 6 பேர் மீது குஜராத் குற்றப் பிரிவு போலீஸார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்

“கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டபோது, அவர்கள் காவல் நிலையங்களை தாக்குமாறும், ரயில் பாதைகளை சேதப்படுத்துமாறும், காவலர் களைக் கொலை செய்யுமாறும் ஆதரவாளர்களுக்குக் கட்டளை யிட்டனர். இது அரசுக்கு எதிரான போர், தேசத் துரோகம்” என காவல் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொலைபேசி இடைமறிப்பு உரையாடலில் இருப்பது, ஹர்திக்கின் குரல்தான் என்பதை உறுதி செய்ய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக காந்திநகர், தடய அறிவியல் ஆய்வக அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹர்திக்கின் குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. அவரின் குரல் மாதிரி, காவல் துறையால் அளிக்கப்பட்ட தொலைபேசி உரையாட ஆடியோவில் உள்ள குரலும் ஒத்துப்போகின்றன. இதுதொடர்பான அறிக்கை காவல் துறையிடம் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

ஹர்திக் தற்போது சூரத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT