தாத்ரா - நாகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கர் உடல் மும்பை ஓட்டலில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.
யூனியன் பிரதேசமான தாத்ரா- நாகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கர். பாரதிய நவசக்தி கட்சியின் தலைவரான அவர், கடந்த 2019- ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தாத்ரா- நாகர் ஹவேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். முன்னதாக அவர் காங்கிரசில் இருந்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும், வீட்டு விவகார அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
இந்தநிலையில் தெற்கு மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தாத்ரா நகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கர் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார் . போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மோகன் டெல்கர் எதற்காக மும்பை வந்தார், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட தெற்கு மும்பையிலுள்ள விடுதியில் அவர் ஏன் தங்கினார் என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மும்பை போலீஸார் அதிகாரி சைதன்யா கூறுகையில் ‘‘எம்.பி. மோகன் டெல்கரின் உடல் மரைன் டிரைவ் பகுதியில் ஓட்டலில் கண்டெடுக்கப்பட்டது. அங்கிருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது . விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து தெரியவரும்’’ என்று கூறினார்.