கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா: கோப்புப் படம். 
இந்தியா

காவிரி-குண்டாறு திட்டம்; காவிரி உபரி நீரை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா எதிர்ப்பு

பிடிஐ

காவிரி நிதியிலிருந்து வரும் உபரி நீரை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். கர்நாடகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும் என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டிய நிலையில் இந்த கருத்தை எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நேற்று நடந்த விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

காவிரியில் உபரியாக வெளியேறும் நீரைக் கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாகக் குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படும். முதல்கட்டத் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்குக் கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழகம் நிறைவேற்ற உள்ள காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு திட்டம் குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். வெறும் அறிக்கையை மட்டும் வெளியிடுவதில் எந்தப் பயனும் இல்லை. காவிரி ஆற்றின் உபரி நீரைத் தமிழகமோ மற்றவர்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. இதற்காகக் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுமா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில், "இதுவரை அதுபற்றிச் சிந்திக்கவில்லை" எனத் தெரிவித்தார்

இதற்கிடையே கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மாநிலச் சட்ட வல்லுநர்களுடன், நதிநீர் பங்கீடு தொடர்பாக நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜர்ஹிகோலி கூறுகையில், "காவிரியின் உபரி நீரைத் தமிழகம் பயன்படுத்தி ஆறுகளை இணைக்கும் திட்டம் குறித்த கவலைகளை மத்திய அரசிடம் தெரிவிப்போம். மாநிலத்தின் நலனைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ஜர்ஹிகோலி இன்று சந்தித்துப் பேசுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT