புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் வலிமைப்படுத்துவதே மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சர்வதேச தாய் மொழி தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: இந்தியர்கள் அனைவருக்கும் தாய் மொழி தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது கலாச்சாரத்துடன் ஒன்றி இருக்க இந்த தினம் நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கருத்து தெரிவிப்பதற்கு அவரவர் தாய்மொழியே ஆற்றல்மிக்க ஊடகமாக விளங்குகிறது.
இந்திய மொழிகள் அனைத்தையும் பாதுகாப்பதற்கும், அவற்றை வளர்ச்சி அடைய செய்வதற்கும், வலிமைப்படுத்துவதற்கும் பிரமதர் மோடி தலைமையிலான பாஜக அரசு உறுதிப்பூண்டுள்ளது. இதையே நமது புதிய கல்விக் கொள்கையும் பிரதிபலிக்கிறது. தாய்மொழிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தி, அடுத்த தலைமுறை குழந்தைகளிடம் நமது கலாச்சாரத்தின் அடித்தளத்தை வலிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.