இந்தியா

ராம்கோபால் வர்மா இயக்கிய ‘கில்லிங் வீரப்பன்’ படத்துக்கு தடை: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

இரா.வினோத்

திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'கில்லிங் வீரப்பன்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இவர் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், '' கடந்த 2008-ம் ஆண்டு இயக்குநர் ராம் கோபால் வர்மா என்னை அணுகினார். தான் வீரப்பனைப் பற்றி இந்தியில் படம் இயக்க இருப்பதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் எனவும் கோரினார். எனவே இந்தியில் மட்டும் திரைப்படம் எடுக்க அனுமதி அளித்தேன். தமிழ்,கன்னடம் உட்பட பிறமொழி உரிமையை எனக்கு வழங்குவதாகவும் ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டார். தற்போது ஒப்பந்தத்துக்கு மாறாக 'கில்லிங் வீரப்பன்' படத்தை கன்னடம்,தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் எடுத்துள்ளார். இதனை விரைவில் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஒப்பந்தத்தை மீறி படம் எடுத்துள்ள ராம்கோபால் வர்மாவிடம் பலமுறை தொடர்பு கொண்டும், உரிய பதில் அளிக்கவில்லை. மேலும் இந்தப் படத்தில் எனது கணவரையும், என்னையும் தவறாக சித்தரிப்பதாக தெரிகிறது. எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்''என கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பெங்களூரு மாநகர 32-வது அமர்வு நீதிமன்ற நீதிபதி வி.பி.சூரியவம்சி, ‘கில்லிங் வீரப்பன்’ படத்துக்கு வருகிற டிசம்பர் 17-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார். மேலும் முத்துலட்சுமியின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு சம்மன் அனுப்ப நேற்று முன் தினம் உத்தரவிட்டார். இதனால் 'கில்லிங் வீரப்பன்' திரைப்படத்தை எதிர்பார்த்திருந்த சிவராஜ் குமாரின் ரசிகர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோடிகளில் புரளும் பேரம்

இயக்குநர் ராம் கோபால் வர்மா முத்துலட்சுமி தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.நேற்று பெங்களூரு வந்த‌ ராம் கோபால் வர்மாவிடம், ரூ.25 கோடி கொடுத்தால், வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக முத்துலட்சுமி தரப்பினர் கூறியதாகத் தெரிகிறது. அதற்கு ராம் கோபால் வர்மா, 2008-ம் ஆண்டே முத்து லட்சுமிக்கு ரூ. 31 லட்சம் பணம் கொடுத்து இந்த உரிமையை பெற்றேன். ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி முத்து லட்சுமி கூடுதலாக பணம் கேட்பது சரியல்ல. அதுவும் ரூ. 25 கோடி தர முடியாது''என கூறியதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT