மும்பையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடையை மூடி சீல் வைத்த அதிகாரிகள்: படம் ஏஎன்ஐ 
இந்தியா

புனேயில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: இரவு 11 முதல் காலை 6 வரை மக்களுக்குத் தடை: பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

பிடிஐ

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து அங்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை அத்தியாவசியமற்ற செயல்களுக்குத் தடைவிதித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள், தனியார் பயிற்சி நிலையங்கள் ஆகியவை வரும் 28-ம் தேதிவரை விடுமுறை அளிக்கவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், அடுத்த ஒருவாரத்துக்கு இரவு 11 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று புனே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் சிறிய தனிமைப்படுத்த பகுதிகளை அமைத்தல், கரோனா சிகிச்சை மையங்கள், கரோனா பரிசோதனையை அதிகப்படுத்துதல், கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், திருமணங்களில் கட்டுப்பாடு போன்றவை விதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் இந்த முடிவுகளை புனே மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

கடந்த24 மணிநேரத்தில் புனேயில் புதிதாக 998 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5,14,319 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு 11,698 உயர்ந்துள்ளது.

புனே மண்டல ஆணையர் சவுரவ் ராவ் கூறுகையில் " கடந்த 3 மாதங்களாக புனே மாவட்டம் கட்டுக்குள் இருந்தது.ஆனால், தற்போது கரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதனால் இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை வாகனத்தில் ஏற்றிய நகராட்சி ஊழியர்கள்

நாளேடுகள் விற்பனை, பால், காய்கறிகள் சப்ளை, மருத்துவமனை, ஆகியவற்றுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், ரெஸ்டாரண்ட்கள் ஆகியவை இரவு 11 மணியுடன் மூடப்பட வேண்டும்.கரோனா வைரஸ் மேலும் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன் மாவட்டத்தில் கரோனா பாஸிட்டிவ் விகிதம் 4 சதவீதமாக இருந்தது, தற்போது 10 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆதலால், கட்டுப்பாடுகள் உடனடியாக விதிக்கப்பட்டுள்ளன. சூழலைப் பொருத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

திருமணம், விஷேச நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குள் செல்ல யாருக்கும் தடையில்லை. ஆனால், மக்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்"எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT