மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணியை ஆதரித்தும் தனது அண்ணன் சிரஞ்சீவி இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், விஜய வாடாவில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த சந்திப்பின்போது, அமராவதி தலைநகருக்காக வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என வேண்டுகோள் வைத்தேன்.
பொதுமக்களிடமிருந்து ஒருபோதும் வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று முதல்வர் உறுதி அளித்தார். மேலும், மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து குறித்தும் பேசினோம்.
புதிய தலைநகரை நிர்மாணிப் பதிலேயே அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக மக்கள் கருதுகின்றனர். எனவே, மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மக்களுக்கு தெரிய வேண்டும் என குறிப்பிட்டேன்.
மக்களுக்கு தேர்தல் நேரத்தில் பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் டெல்லி, பிஹார் மாநிலங்களில் ஏற்பட்ட நிலைமைதான் இங்கும் ஏற்படும். இது பாஜகவுக்கு பெரும் நஷ்டமாக அமையும்.
அதேநேரம் தேர்தலில் நேரடியாக போட்டியிடும் எண்ணம் இதுவரை இல்லை. ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றா விட்டால், வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் ஜனசேனா கட்சி போட்டியிடும். இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்தார்.