இந்தியா

சுபாஷ் சந்திரபோஸை மறக்கடிப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை மறக்கடிக்க சிலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை தற்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பாஜகவும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால் இவ்விரு கட்சிகளும் மும்முரமாக பிரச் சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடிக்கடி மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி பாஜக சார்பில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அமித் ஷா பேசியதாவது:

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சுதந்திர வேள்வியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான வீரர்களை மேற்கு வங்க மண் நமக்கு தந்துள்ளது. அவர்கள் தன் இன்னுயிரை துச்சம் என மதித்து இந்திய சுதந்திரத்துக்காக போராடியுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

வலிமைமிகு தேசம்

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவரான சுபாஷ் சந்திரபோஸ் நினைத்திருந்தால், ஒரு உயரதிகாரியாக பதவி வகித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. நம்மை அடிமைப்படுத்தும் பிரிட் டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் பணி செய்ய மறுத்து, சுதந்திரப் போராட்டத்துக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றினை ஒவ்வொரு இந்திய இளைஞரும் படிக்க வேண்டும். வரலாறு அறிந்த இளைஞர்களால்தான் வலிமைமிகு தேசத்தை உருவாக்க முடியும்.

சுபாஷ் சந்திரபோஸை மறக்கடிக்க சில தீயசக்திகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால், அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. நேதாஜியின் தியாகம், துணிச்சல், வீரம் ஆகியவற்றால் உலகம் உள்ளவரை அவர் நினைவுகூரப்படுவார்.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.

முன்னதாக, மேற்கு வங்க சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் விதமாக பாஜக சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT