திருமலை: திருமலையில் நேற்று ரதசப்தமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவினை ‘மினி பிரம்மோற்சவம்’ என்றழைக்கும் அளவிற்கு ஒரே நாளில் காலை முதல் இரவு வரை உற்சவ மூர்த்திகள் 7 வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ரதசப்தமியையொட்டி, நேற்று காலை சூரியபிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமன் வாகன சேவைகள் நடைபெற்றன. பின்னர், மதியம் சக்கர ஸ்நான நிகழ்ச்சியும், அதன் பின்னர் கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனங்களில் உற்சவர்கள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி உலா வருவதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் என அனைத்து தேவஸ்தான கோயில்களிலும் நேற்று ரதசப்தமி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.