இந்தியா

மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு விசா வழங்கும் திட்டம்: 10 நாடுகள் கருத்தரங்கில் மோடி யோசனை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, சீசெல்ஸ் ஆகிய 10 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற காணொலி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

தெற்காசியாவில் மக்கள் தொகை அதிகம். எனினும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, உயிரிழப்பை குறைத்து சாதனை படைத்துள்ளோம். தடுப்பூசி போடும் பணியிலும் தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

கரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் அண்டை நாடுகளுக்கு மருத்துவ சேவைக்காக செல்ல சிறப்பு விசா திட்டத்தை அமல்படுத்தலாம்.

இதன் மூலம் மருத்துவ அவசர நிலையின்போது நட்பு நாடுகளின் அழைப்பை ஏற்று மருத்துவ பணியாளர்களை அந்த நாடுகளுக்கு விரைந்து அனுப்ப முடியும்.

தெற்காசிய நாடுகளிடையே விமான ஆம்புலன்ஸ் திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.

ஆயுஷ்மான் திட்டம் வெற்றி

இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம்வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பான அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இதேபோல மற்ற நாடுகளும் தங்களது சுகாதார திட்டங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பருவநிலை மாறுபாடு, இயற்கை பேரிடர், வறுமை ஒழிப்பு,எழுத்தறிவு, சமூக, பாலின பாகுபாட்டை களைவது ஆகியவற்றில் நாம் இணைந்து செயல்படலாம். 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக அமையும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

SCROLL FOR NEXT