மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊழல் ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதத்தில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் கடந்த 6-ம் தேதி 'மாற்றத்துக்கான யாத்திரை' என்ற பெயரில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதன் 5-ம் கட்ட பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் எங்கும் எதிலும் ஊழல் என்ற நிலை உள்ளது. புயல் நிவாரணத்தில்கூட ஊழல் நடைபெற்றுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விதமான ஊழல்களும் ஒழிக்கப்படும். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் அமல் செய்யப்படும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். கங்காசாகர் கண்காட்சி, சர்வதேச கண்காட்சியாக நடத்தப்படும். மேற்கு வங்கம், தங்க பூமியாக மாறும்.
முதல்வர் மம்தா பானர்ஜி அரசை அகற்ற வேண்டும் என்பது பாஜகவின் லட்சியம் கிடையாது. மேற்கு வங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏழைகள், பெண்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம்.
முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு வங்கி அரசியலை நடத்தி வருகிறார். பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மேற்கு வங்கத்தில் வெளிநாட்டினர் நுழைய முடியாது. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் துர்கை பூஜை, சரஸ்வதி பூஜையை நடத்துவதற்குகூட நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்தும் மாறும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.