இந்தியா

உ.பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 2 தலித் சிறுமிகள் வயலில் சடலமாக மீட்பு

செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 2 சிறுமிகள் நேற்று முன்தினம் வயல் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

உன்னாவ் மாவட்டம், அசோகா காவல் எல்லைக்குட்பட்ட பாபுஹராஎன்ற கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 14, 15 மற்றும் 16வயதுடைய 3 சிறுமிகள் நேற்றுமுன்தினம் பிற்பகலில் கால்நடைகளுக்கு புல் அறுக்க வயலுக்குச் சென்றனர். மாலையில் இவர்கள் வீடு திம்பாததால் குடும்பத்தினர் அவர்களைத் தேடிச் சென்றனர்.

இந்நிலையில் வயல் ஒன்றில்மயங்கிக் கிடந்த இவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 2 சிறுமிகள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 3-வதுசிறுமி உன்னாவ் மருத்துவமனைக்கும் பிறகு கான்பூர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து உன்னாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் ராவ் குல்கர்னி கூறும்போது, “சிறுமிகளின் வாயிலிருந்து வெண்ணிறப் பொருள் வந்துள்ளது. அவர்கள் விஷம் அருந்தியதற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்” என்றார்.

வயலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமிகள் கிடந்ததாக அவர்களின் சகோதரர் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. லக் ஷ்மி சிங் கூறும்போது,“நாங்கள் அங்கு செல்வதற்கு முன்பே உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் இதுபற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. சிறுமிகளின் உடலில் காயங்கள் இல்லை. சம்பவ இடத்தில் அவர்கள் போராடியதற்கான அறிகுறிகள் இல்லை. பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். விரிவான விசாரணை நடத்தப்படும்” என்றார்.

ராகுல், பிரியங்கா கண்டனம்

இச் சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் “உ.பி.யில் மாநில அரசு தலித் சமூத்தினரை மட்டும் நசுக்கவில்லை. பெண்களுக்கான மனித உரிமைகள் மற்றும் கவுரவத்தையும் நசுக்குகிறது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது சிறுமியை உயர் சிகிச்சைக்காக டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார். சிறுமிகளின் குடும்பத்தினரை போலீஸார் பிடித்து வைத்திருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT