இந்தியா

நாட்டின் எதிர்காலம் குறித்து குழந்தைகள் கனவு காண ஊக்கம் தர வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

பிடிஐ

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குழந்தைகளுக்கு போதிய வாய்ப்பும், வழிகாட்டுதலும் அளித்தால் இந்த சமூகத்துக்கு அவர்களால் முக்கிய பங்காற்ற முடியும். குறிப்பாக குழந்தைகள் கல்வி பெறுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெளிவான அறிவு திறமை வளரும். நாட்டின் எதிர்காலம் குறித்து மிகப் பெரிய அளவில் கனவு காண அவர்களுக்கு நாம் ஊக்கம் அளிக்க வேண்டும்.

அப்போது தான் அவர்களது முழு திறனையும் வெளிக் கொண்டு வர முடியும். நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில் தான் உள்ளது. எனவே அவர்கள் திறம்பட வளர நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இளம் வயது சாதனையாளர்களுக்கு தேசிய குழந்தைகள் விருது, ராஜீவ் காந்தி மாணவ சேவை விருது, குழந்தைகள் நலனுக்கான தேசிய விருது ஆகியவற்றை அளித்து வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT