தங்கள் தொகுதிக்கு வெளியே இருக்கும் வாக்காளர்களும் தபால்மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மனுவை எஸ். சத்யன் என்பவர் வழக்கறிஞர் காளீஸ்வரன் ராஜ் என்பவர் மூலம் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடைமுறையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தபால்மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமை மாணவர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும், தங்கள் தொகுதியைவிட்டு வெளியே தொழில் நிமித்தமாக, வேலை காரணமாக வந்துள்ள மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
தங்கள் தொகுதியைவிட்டு வெளியே வசிக்கும் மக்களுக்குத் தபால் வாக்களிக்கும் வசதி, மின்னணு மூலம் வாக்களிக்கும் வசதி போன்றவை வழங்கப்பட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு வருவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சுதந்திரமாக, நியாயமாகத் தேர்தல் நடத்துவதற்கு எதிரானதாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 60-ன்படி, தகுதியுள்ள வாக்காளர்களைத் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏஎஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, " என்ன மாதிரியான மனு இது. இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பீர்களா. உங்கள் தொகுதி குறித்து எந்த கவலையும், கவனமும் செலுத்தாதபோது, எவ்வாறு சட்டம் உங்களுக்கு உதவும்" எனக் கேள்வி எழுப்பினர்.
இதுபோன்று தொகுதிக்கு வெளியே இருப்பவர்கள் வாக்களிக்க ஏதேனும் இடத்தை நிர்ணயிக்கமுடியுமா . அதற்கு நாடாளுமன்றம், மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா எனக் கேட்டனர்.
இதையடுத்து இந்த மனுமீது மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர்