மேற்கு வங்கத் தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேனை வேறு கட்சியில் சேருமாறு அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் போராடி வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் தனியாகக் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
இதில் கடந்த 2 மாதங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்துள்ளனர். இதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தல் ரீதியான மோதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத் தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேன் முர்ஷிதாபாத்தில் உள்ள நிமித்தா ரயில் நிலையத்திலிருந்து குடும்பத்தினருடன் ரயிலில் கொல்கத்தாவுக்கு நேற்று செல்ல முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் உசேன் படுகாயமடைந்தார்.
இந்தத் தாக்குதலில் அமைச்சர் உசேன் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.
அமைச்சர் உசேனின் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் அமைச்சர் உசேனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
அமைச்சர் உசேன் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு இன்று காலையில் முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார். அங்கு மருத்துவர்களிடம் உசேனின் உடல்நலம் குறித்து முதல்வர் மம்தா விசாரித்தார்.
அதன்பின் முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:
''அமைச்சர் ஜாகீர் உசேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய சதி அடங்கியுள்ளது. அவரை வேறு ஒரு கட்சியில் சேருமாறு சிலர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். அந்த நெருக்கடியின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால், எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் ரயில்வே துறை மெத்தனமாக நடந்துள்ளது. அமைச்சர் உசேன் மீது தாக்குதல் நடத்துவது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அமைச்சருடன் இருந்தவர்கள், பொதுமக்கள் என 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் தீவிரமான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும். இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கை மாநில சிஐடி பிரிவு விசாரணை நடத்தும்".
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.