இந்தியா

‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்த வரைவு திட்டம் தயாரித்து தர முடியாது: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு

எம்.சண்முகம்

‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்த வரைவு திட்டம் தயாரித்து வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை யடுத்து, ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்தும் முயற்சியில் உச்ச நீதிமன்றம் இறங்கியுள்ளது. சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில், ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்துவது குறித்த வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘வரைவு திட்டம் தயாரிக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் வழங்கினால், நீதிபதிகள் நியமனத்தில் மீண்டும் அதிகார தலையீடு ஏற்பட வழிவகுக்கும்’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘நியமனத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப் போவதில்லை. வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மத்திய அரசின் வரைவு திட்டத்தை ஏற்பதும், ஏற்காததும் நீதித்துறையின் கையில் உள்ளது’ என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘வரைவு திட்டம் தயாரிக்க மத்திய அரசு விரும்பவில்லை. அப்படி செய்ய வேண்டும் என்றால் சட்டப்படி மத்திய அரசுக்கு உத்தரவாக பிறப்பியுங்கள்.

‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்தும் பொறுப்பை நீதித்துறை கையில் எடுக்க கூடாது. அதை மத்திய அரசின் முடிவுக்கே விட வேண்டும். தலைமை நீதிபதியிடம் ஆலோசித்துவிட்டு அந்த முடிவை தெரிவியுங்கள். மத்திய அரசின் திட்டத்தில் கூடுதலாக ஏதாவது சேர்க்கலாமே தவிர, அதை முழுமையாக மாற்றும் வகையில் எதுவும் செய்ய முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.

‘வரைவு திட்டம் தயாரிக்க நேற்று ஒப்புக் கொண்டு விட்டு இன்று முடியாது என்கிறீர்களே’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு முகுல் ரோத்கி, ‘நானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசிடம் ஆலோசித்துவிட்டுதான் முடிவைச் சொல்ல முடியும். மத்திய அரசு சார்பில் தெரிவித்த முடிவை இப்போது தெரிவிக்கிறேன்’ என்றார்.

இதற்கிடையே, இப்பிரச்சினை யில் ஒரு முடிவு எட்டப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள ‘கொலீஜியம்’ நியமன முறையில் எந்த மாற்றமும் இருக்காது. அதை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது.

நீதிபதிகள் நியமனம் எப்போதும் போல் தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT