ஒடிசா புரி ஜெகன்னாதர் கோயிலுக்கு 5 கிலோ தங்கம் மற்றும் 4 கிலா வெள்ளியில் செய்யப்பட்ட ஆபரணங்களை பக்தர் ஒருவர் நன்கொடை அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது புரி ஜெகன்னாதர் கோயில். இந்தக் கோயில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. உலகப் புகழ்ப்பெற்ற இந்தக் கோயில் கடவுள்களுக்கு, பக்தர் ஒருவர் 5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளியில் அரியகலை நுணுக்கங்களுடன் செய்யப்பட்ட ஆபரணங்களை பஞ்சமியை முன்னிட்டு நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நகைகள் சிறப்பு பூஜைகளின் போது, ஜெகன்னாதர் கோயிலில் பாலபத்ரா, தேவி சுப்ரதா, ஜெகன்னாதர் ஆகிய கடவுள்களுக்கு அணிவிக்கப்படும் என்று ஜெகன்னாதர் கோயில் நிர்வாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கடந்த செவ்வாய்க்கிழமை பக்தர் ஒருவர், கோயில் தலைமை நிர்வாகி கிஷண்குமாரைச் சந்தித்து ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினார். மேலும், தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அந்த பக்தர் கேட்டுக் கொண்டார்’’ என்றனர்.
கோயிலுக்கு நன்கொடை வழங்கப்பட்ட ஆபரணங்கள் 4.858 கிலோ தங்கம், 3.867 கிலோ வெள்ளியில் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆபரணங்கள் கோயில் கருவூலத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன என்று கோயில் கருவூலர் தெரிவித்தார்.