டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயச் சங்கத் தலைவர் ஒருவரைக் கொல்ல பிரிட்டன், பெல்ஜியத்திலிருந்து தீவிரவாதிகள் வந்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி டெல்லி மாநில எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் 3 மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தி விவசாய சங்கத் தலைவர் ஒருவரைக் கொல்ல உலகளாவிய சதி நடைபெற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காலிஸ்தான் கமாண்டோ படைப் பிரிவினர் (கேசிஎப்) இந்தச் சதித்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
விவசாய சங்கத் தலைவரைக்கொல்ல பிரிட்டன், பெல்ஜியத்திலிருந்து தீவிரவாதிகளை கேபிசிஎப் பிரிவினர் வரவழைத்துள்ளதாகவும், அவர்கள் தகுந்த நேரம்பார்த்து அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து கேசிஎப் அமைப்பின் திட்டத்தை முறியடிக்க மத்திய அரசின் உளவுப்பிரிவான ரா, புலனாய்வுப் பிரிவு அமைப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து கேசிஎப் தீவிரவாத அமைப்பை நீக்குவதற்காக போராடிய அந்த குறிப்பிட்ட விவசாயச் சங்கத் தலைவரை பழிதீர்க்கவே கேசிஎப் இதுபோன்ற அதிரடியில் இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் கேசிஎப் தீவிரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் கனடா, பிரிட்டன், பெல்ஜியம், பாகிஸ்தான் நாடுகளிலும் இந்த அமைப்புக்கு உறுப்பினர்கள் உள்ளனர்.
இதுகுறித்து அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “குறிப்பிட்ட விவசாய சங்கத் தலைவரை கொல்வதற்கு கேஎசிஎப் தீவிரவாதிகள் சதி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. பெல்ஜியம், பிரிட்டனிலிருந்து இதற்காக 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
டெல்லி எல்லையில் அந்த விவசாய சங்கத் தலைவரைக் கொல்வதன் மூலம் அங்கு நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறும். அது இந்தியா முழுவதும் பரவும். மேலும் அந்த பழியானது அரசு மீதும், அரசியல் கட்சிகள் மீதும் விழும் என்று கேசிஎப் நம்புகிறது. எனவேஇந்த நேரத்தில் இதுபோன்ற சதித்திட்டத்தை அவர்கள் தீட்டியுள்ளனர். இதற்காக விவசாய சங்கப் போராட்டத்தைப் பயன்படுத்தி சதி செய்யகேசிஎப் முயன்று வருகிறது” என்றார்.
டெல்லி போராட்டத்தின்போது, போராட்டதைத் தூண்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்ட 400 ட்விட்டர் கணக்குகளை இந்திய புலனாய்வு அமைப்புகள் முடக்கியது குறிப்பிடத்தக்கது.