இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மறுபாகம் மார்ச் 8-ல் கூட வாய்ப்பு

ஆர்.ஷபிமுன்னா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் மார்ச் 8-ல் கூடும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மீதான இறுதி முடிவு நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட உள்ளது.

கரோனா பரவல் சூழலில், முதன்முறையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 தொடங்கி மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் சுமார் 25 எம்.பி.,க்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. கரோனா பாதிப்பால் காங்கிரஸின் கன்னியாகுமரி எம்.பி.,யான வசந்தகுமார் பலியானார்.

இதனால், மழைக்காலத் தொடர் திட்டமிட்ட 17 நாட்களுக்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.

இந்த ஆண்டும், மத்திய பொது பட்ஜெட்டிற்கான நாடாளுமன்ற முதல்பாகக் கூட்டத்தொடர் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை அதே வகையில் நடைபெற்றது.

மழைக்காலக் கூட்டத்தொடரைப் போலவே இத்தொடரிலும் கரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக, மாநிலங்களவை காலையிலும், மக்களவை மதியத்திலும் நடைபெற்றன.

இச்சூழலில் எம்.பி.,க்கள் எவரும் கரோனாவால் பாதிப்பிற்கு உள்ளானதாகத் தெரியவில்லை. கரோனாவுக்கு அஞ்சி, கடந்த கூட்டத்தொடருக்கு வராத பல மூத்த எம்.பி.,க்கள் கூட இந்தமுறை வந்திருந்தனர்.

நாடாளுமன்ற அலுவலர்களில் சுமார் ஐந்து பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் மறுபாகம் சமூக விலகலின்றி ஒரே சமயத்தில் இரு அவைகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் நாடாளுமன்ற மூத்த அலுவலர்கள் வட்டாரம் கூறும்போது,

‘நடந்து முடிந்த தொடரில் பெரும்பாலான எம்.பிக்கள் கரோனா தடுப்பு ஊசி போடவில்லை.

டெல்லியிலும் கரோனா பரவல் சூழல் வெகுவாகக் குறைந்து வழக்கம்போல் திறக்கப்பட்ட பள்ளிகளிலும் பாதிப்புகள் இல்லை. எனவே, அடுத்த தொடர் வழக்கம்போலவே இருப்பினும் மிகச்சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்படும்.

இதில், பார்வையாளர்கள் மற்றும் எம்.பி.,க்களின் உதவியாளர்களுக்கான அனுமதி ரத்து தொடரும். இதற்கான இறுதி முடிவு சில தினங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழுவினரால் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.’ எனத் தெரிவித்தனர்.

இந்தமுறை முடிந்த தொடரில் மத்திய அமைச்சர்கள் பலரையும் எம்.பிக்கள் மனு அளிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சந்தித்தனர். அதற்காக நேரம் கேட்கும் எம்.பி.,க்கள் தனக்கு கரோனா இல்லை என்ற மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

அதேபோல், கரோனா பரவலின் தீவிரச் சூழலில் மத்திய அமைச்சகங்களின் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டங்களில் அதிக எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், சமீப நாட்களாகவே இந்த எண்ணிக்கையும் கூடி அவை வழக்கம்போல் நடைபெறத் துவங்கி உள்ளன.

நாடாளுமன்ற இணையதளத்தில் உள்ள தகவலின்படி இருஅவைகளிலும் சேர்த்து மொத்தம் 785 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 65 வயதிற்கும் அதிகமானவர்கள் எண்ணிக்கை மாநிலங்களவையில் 97, மக்களவையில் 130 ஆகும்.

இதில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மாநிலங்களவையில் 20 எம்.பிக்களும், 75 வயதுக்கு மேற்பட்டோர் மக்களவையில் 30 என்றும் உள்ளனர்.

SCROLL FOR NEXT