மோசமான நடத்தை உள்ளவர்கள், குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தவும், அமைதியற்ற சூழலை இயல்புக்குக் கொண்டுவரவும் தேசதுரோகச் சட்டத்தை பயன்படுத்த முடியாது என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
விவசாயிகள் போராட்டத்தின் போது, சமூக வலைதளத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டதாகக் கூறி தேவி லால் புர்டாக், ஸ்வரூப் ராம் ஆகிய இருவரை தேச துரோகச்சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தனர். அந்தச் சட்டத்தை இருவர் மீதும் பயன்படுத்த முடியாது எனக் கூறி இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
டெல்லியில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது, தேவி லால் புர்டாக், ஸ்வரூப் ராம் ஆகிய இருவரும் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் போலியான வீடியோக்களை பதிவிட்டனர்.
அதில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான போலீஸார் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
உண்மையில் அந்த வீடியோ ஜார்க்ண்ட் மாநிலத்தில், உள்ள ஊர்க்காவல் படையினர் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய போராட்டமாகும். இந்த வீடியோவை இருவரும் தங்கள் பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர்.
இதையடுத்து, டெல்லி போலீஸார் தேவி லால் புர்டாக், ஸ்வரூப் ராம் இருவரையும் வதந்திகளைப் பரப்புதல், மற்றும் தேசத்துரோகச் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் தேவி லால், ஸ்வரூப் ராம் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், தங்களுக்கு தொடர்பில்லாத வழக்கில் கைது செய்துள்ளார்கள் எனக் கோரியும் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு கூடுதல் நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தர்மேந்திர ராணா கூறுகையில் “ தேசதுரோகச் சட்டம் என்பது ஒரு ஆளும் அரசின் கைகளி்ல் இருக்கும் மிகவும் வலிமையான ஆயுதம். சமூகத்தில் அமைதியின்மை நிலவும்போது, அதைப்பயன்படுத்தி அமைதியை ஏற்படுத்த அந்தச் சட்டம் பயன்படும். ஆனால், குற்றவாளிகளை நசுக்குவதற்கும், ஒடுக்குவதற்கும், அவர்களைக் கட்டுப்படுத்தி அமைதிக்குக் கொண்டுவரவும் தேசத் துரோகச் சட்டத்தை பயன்படுத்த முடியாது.
சமூகத்தில் அமைதியைப் பாதிக்கும் எந்த ஒரு செயலையும், ஒழுங்கற்ற நடவடிக்கையையும் சட்டம் தடை செய்கிறது. ஆனால், குற்றம்சாட்டவர்கள் எந்தவிதமான வன்முறையில் ஈடுபடவில்லை, வன்முறையைத் தூண்டவில்லை, சமூகத்தில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தவில்லை இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபபடாதபோது, ஐபிசி 124ஏ பிரிவின் கீழ் தேசதுரோகச் சட்டம் பாய்ந்துள்ளது எனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
என்னைப் பொருத்தவரை, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள தேச துரோகச்சட்டம் மிகவும் விவாதத்துக்குரிய விஷயமாகும். நானும் அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்தேன். அதில் டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரி உரத்த குரலில் ஏதோ பேசுகிறார், அவருக்கு அருகே ஏராளமான போலீஸார் நிற்கிறார்கள்.
ஆனால், குரலைக் கேட்கும்போது பதற்றமான சூழல் இருப்பதுதான் தெரிகிறது. ஆனால், இந்த வீடியோ உருவாக்கியவர்கள் குற்றச்சாட்டப்பட்டவர்கள் அல்ல எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருவரும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்கள்.
ஆதலால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருவரையும் ரூ.50 ஆயிரம் ஜாமீனில் விடுவிக்கிறேன். இவரையும் போலீஸ் பாதுகாப்பில் விசாரணை செய்ய வேண்டிய தேவையில்லை. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி அழைக்கும்போது இருவரும் விசாரணைக்குச் செல்ல வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருவரும் போலியாக ஆவணங்களை உருவாக்கினார்கள் என்று நிருபிக்க போலீலஸார் தரப்பு தவறிவிட்டது. இவர்களுக்கு எதிராக ஐபிசி 505 பிரிவின் கீழ் வதந்திகளை பரப்புதல் குற்றச்சாட்டு சாதரணமானது இது ஜாமீனில் வெளிவரக்கூடியது” எனத் தெரிவித்தார்.