இந்தியா

காலியாகும் முன்பே அரசு பங்களாக்களில் நுழைய முயலும் பிஹார் எம்.எல்.ஏ.க்கள்

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதற்காக, அதில் ஏற்கெனவே தங்கி உள்ளவர்கள் காலி செய்வதற்கு முன்பாகவே அதில் நுழைய 3 ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் முயற்சி செய்வதாகப் புகார் கிளம்பியுள்ளது.

மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கு பின்னர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் தமக்கு பிடித்தமான அல்லது முக்கியப் பகுதிகளில் உள்ள பங்களாக்களில் குடிபுக விரும்புவது வழக்கம். இதற்காக அவை காலியாகி அரசு தமக்காக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்படும் வரை காத்திருப்பது அவசியமாகிறது. ஆனால், அதை மீறும் வகையில் புதிய எம்.எல்.ஏக்களான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அருண் குமார் யாதவ் மற்றும் அணில் குமார் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் ஆர்.என்.சிங் ஆகியோர் கட்சி எம்.எல்.ஏக்கள் செயல்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரான சஹர்சா தொகுதி எம்.எல்.ஏவான அருண் குமார் யாதவ், பாட்னாவின் முக்கியப் பகுதியான தென் பெய்லி சாலை எண் 10-ல் பலவந்தமாக குடிபுக முயன்றுள்ளார். இந்த பங்களாவில் தங்கி இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மஞ்சித்சிங் வைகுந்த்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இவரது பங்களாவின் வெளியில் உள்ள பெயர் பலகையை நேற்று கழட்டிய அருண் குமாரின் ஆட்கள் அவருடையதை மாட்டிச் சென்றுள்ளார்கள்.

இதனால், வெறுப்படைந்த மஞ்சித்சிங் அந்த பங்களாவை மறுநாளே காலி செய்ததுடன் பாட்னாவில் உள்ள தம் சொந்த வீட்டிற்கு குடிபுகுந்து விட்டார். வழக்கமாக தோல்வி அடைந்த எம்.எல்.ஏக்கள் தம் பங்களாக்களை காலி செய்ய அரசு சார்பில்ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு மூன்று மாத அவகாசமும் அளிக்கப்படுகிறது.

இது குறித்து அருண் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர், ‘அந்த பங்களா எனக்கே ஒதுக்கப்படும் என நம்புகிறேன். இதை நான் மஞ்சித்சிங்கிடம் கூறிய போது அவர் அளித்த ஆலோசனையின் பேரில் தான் எனது பெயர் பலகை மாட்டப்பட்டது.’ எனப் பதில் அளித்துள்ளார்.

ஆனால், இதை மஞ்சித்சிங் மறுத்ததுடன், இது போன்றவர்களால் முதல் அமைச்சரான நிதிஷ்குமார் பிஹார்வாசிகளிடம் வாக்களித்த நல்லாட்சி என்னவாகும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், அரரியாவின் நர்பத்கன்ச் எம்.எல்.ஏவான அணில் குமார் யாதவ் அதே சாலையின் எண் 8-ல் தன் பெயர்பலகையை மாட்டி விட்டார். இதில் தங்கியிருந்த பாஜகவின் எம்.எல்.ஏவான இந்திரதியோ மாஞ்சி தோல்வி அடைந்துள்ளார். இவர் தேர்தல் முடிவுகளுக்கு பின் தன் பங்களஅவை உடனடியாகக் காலி செய்து விட்டார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் பர்பட்டா தொகுதி எம்.எல்.ஏவான ஆர்.என்.சிங், ஹார்டிங் சாலையின் எண் 15 பங்களாவில் தன் பெயர் பலகையை மாட்டி வைத்துள்ளார். இதில், அவரது கட்சியை சேர்ந்த ராகுல் சர்மா தங்கியுள்ளார். இவர் கோசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு உறங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் அவரது பெயர் பலகை அகற்றப்பட்டு ஆர்.என்.சிங்குடையது மாட்டப்பட்டுள்ளது.

இந்த அரசு பங்களாக்கள் கொண்டிருக்கும் அரசு கட்டிடம் மற்றும் சாலை அமைத்தல் துறைகளின் பொறுப்பு ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் இளையமகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவிடம் உள்ளது. பிஹாரின் துணை முதல் அமைச்சரான அவர், ‘அரசின் விதிமுறைகளின்படி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டஎம்.எல்.ஏக்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்படும்.’ என அறிவித்துள்ளார்

SCROLL FOR NEXT