21-ம் நூற்றாண்டுக்கான வரைபடத்தை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
ஆறுகளை இணைத்தல், தொழில் வளாகங்களை உருவாக்குதல், ஸ்மார்ட் கருவிகளை பயன்படுத்துதல் போன்றவற்றில் வரைபடங்களும், துல்லியமான புவியியல் விவரங்களும் மிக முக்கியமானவை.
டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள், மின்னணு-வணிகம், தனியார் ட்ரோன்கள், டெலிவரி, பொருட்கள் கொண்டு செல்லுதல், நகர்ப்புற போக்குவரத்து ஆகியவற்றுக்கு துல்லியமான வரைபடம் தேவைப்படுகிறது.
விவசாயம், நிதி, கட்டுமானம், சுரங்கம், உள்ளூர் நிறுவனம், இந்திய விவசாயிகள், சிறு தொழில்கள் மற்றும் கார்பரேஷன்கள் போன்ற ஒவ்வொரு பொருளாதார முயற்சிக்கும், புவியியல் தரவு மற்றும் வரைபட சேவைகள் அடிப்படையிலான புதுமை தொழில்நுட்ப பயன்பாடுகளில் இருந்து அதிக தகவல்களை பெற வேண்டியுள்ளது.
ஆனால், வரைபட தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை அப்போது இருந்த அரசு விதித்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
வரைபடம் தயாரிப்பதில் இருந்து விநியோகிப்பது வரை அனைத்துக்கும் இந்திய நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். முன் அனுமதி, அனுமதி போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்த ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், தொடக்க நிறுவனங்கள் தேவையற்ற தடைகளுக்கு உட்படுத்தப்படுவதால், வரைபட தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்பு பல தசாப்தங்களாக நடைபெறவில்லை.
தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கவும், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடையவும், புவியியல் தரவு மற்றும் வரைபடம் தொடர்பான ஒழுங்குமுறைகள் தளர்த்தப்படும். இந்திய நிறுவனங்களுக்காக, இந்தியாவின் வரைபடக் கொள்கையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது.
உலகளவில் தயார் நிலையில் கிடைக்கும், வரைபட தொழில்நுட்பங்களை இந்தியாவில் பின்பற்ற தேவையில்லை. வரைபடங்கள் தயாரிக்க, டிஜிட்டல் புவியியல் தரவுகளை புதுப்பிக்க, இந்தியாவில் பயன்படுத்தப்படும் புவியியல் தரவுகளை இனி தாராளமாக பயன்படுத்தலாம்.
நமது நிறுவனங்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட தேவையில்லை. முன் அனுமதி பெற தேவையில்லை.
நமது தொடக்க நிறுவனங்கள், வரைபடங்களை புதுமையுடன் உருவாக்குபவர்கள், சுய சான்றுடன் நம்பப்படுவார்கள்.
சமீபத்திய வரைபடத்தை உருவாக்கும் தொழில்நுட்பங்களை சாதகமாகப் பயன்படுத்தும் இந்திய புவியியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அடுத்த தலைமுறை வரைபடத் தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வரவுள்ளதால், இந்த வரைபடக் கொள்கை, இந்திய புதுமை கண்டுபிடிப்பாளர்களை, வடைபடத் தயாரிப்பில் முன்னேற்றங்களை உருவாக்க உதவும்.
இறுதியில் நமது வாழ்வை எளிதாக்கவும், சிறு தொழில்களை மேம்படுத்தவும் உதவும். வரைபடத் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடாக உருவாகி, அடுத்த தலைமுறை இந்திய வரைபடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உலகின் மற்ற நாடுகளுக்குகொண்டு செல்வதையும் நாம் எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு கூறியுள்ளது.