பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் 28க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கடந்த ஜனவரி மாதம் கல்லூரிகள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்தது. அதன்படி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படிக்கும் 40 மாணவிகளுக்கு கடந்த சனிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் நர்ஸிங் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டது.
இந்தச் சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பெங்களூருவின் பொம்மனஹல்லி பகுதியில், ஒரே குடியிருப்பில் வசிக்கும் 28க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியையும் பெங்களூரு மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தக் குடியிருப்பில் ஏறக்குறைய ஆயிரம் பேர் வசிப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக ஆறு பரிசோதனைக் குழுக்கள் அங்கு முகாமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.