மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயத் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் உச்ச நீதிமன்றக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இதற்கிடையே, இதுதொடர்பான வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இச்சட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக 4 பேர் அடங்கிய நிபுணர் குழுவையும் அமைத்தது.
பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங், 'ஷேத்காரி சங்கதனா' அமைப்பின் தலைவர் அனில் கன்வாட், வேளாண் பொருளாதார நிபுணர்கள் அசோக் குலாடி, பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். பின்னர், இக்குழுவில் இருந்து பூபிந்தர் சிங் விலகினார்.
இரண்டு மாதங்களுக்குள் இந்தக் குழு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்டோருடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதக – பாதக அம்சங்கள் தொடர்பாக வேளாண் துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இந்தக் குழுவினர் ஆன்லைன் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான பல்வேறு கருத்துகளையும், பரிந்துரைகளையும் அவர்கள் வழங்கியதாக நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.