டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகளிடம், ஆன்லைனில் ரூ.34,000 பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மூத்த மகள் ஹர்ஷிதா (25). இவர் பழைய சோபாவை ஆன்லைனில் விற்க தனியார் இணையத்தில் பதிவு செய்திருந்தார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அதனை வாங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதாக கூறிய அந்த நபர், ஒரு கியூ ஆர் கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்ய சொன்னார். ஹர்ஷிதா அதை ஸ்கேன் செய்தபோது சிறிய தொகை அவரது வங்கிக் கணக்கில் சேர்ந்தது.
இதன்பின் முழு தொகையை செலுத்துவதாக கூறிய மர்ம நபர், மற்றொரு கியூ ஆர் கோடை அனுப்பினார். அதை ஹர்ஷிதா ஸ்கேன் செய்தபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்து முதலில் ரூ.20,000, அதன்பின் ரூ.14,000 பணம் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீஸார், ஹரியாணாவின் நூ பகுதியை சேர்ந்த சாஜித் (26), உத்தர பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த கபில் (18), மன்விந்தர் சிங் (25) ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளி வாரிஸ் (25) என்பவர் தலைமறைவாக உள்ளார்.