கோப்புப் படம் 
இந்தியா

இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாஜக ஆட்சி அமைக்க அமித்ஷா திட்டம்: திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் தகவல்

ஆர்.ஷபிமுன்னா

இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாஜகவின் ஆட்சி அமைக்க அமித்ஷா திட்டமிடுவதாக திரிபுராவின் பாஜக முதல்வரான பிப்லப் குமார் தேவ் தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2019 மக்களவையிலும் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

இதனிடையில், நாட்டின் அதிகமான மாநிலங்களிலும் ஆட்சி அமைத்த கட்சியான பாஜக இதை, அண்டை நாடுகளிலும் விரிவுபடுத்தத் திட்டமிடுகிறது. இதற்கான பூர்வாங்கப் பணிகளுக்கு அக்கட்சியின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா வித்திட்டுள்ளார்.

இந்த தகவலை அவரை 2018 திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்காக அம்மாநில பாஜக தலைவர் அஜய் ஜம்வாலுடன் தான் சந்தித்த போது தெரிவித்ததாக முதல்வர் பிப்லப் குமார் தேவ் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பிப்லப் குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, ‘இந்த சந்திப்பின் போது நாட்டின் அனைத்து மாநிலங்களையும் பாஜக ஆட்சி அமைகிறதே? எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேபாளம், இலங்கையிலும் நம் ஆட்சி அமைய வேண்டி உள்ளதாகப் பதிலளித்தார்.

மேற்கு வங்கம் மற்றும் தென் மாநிலங்களிலும் பாஜக பெரிய மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், உலகின் மிகப்பெரியக் கட்சியாக பாஜக அமைந்து விடும்.’ எனத் தெரிவித்தார்.

இதுபோல், திரிபுரா முதல்வர் வெளியிடும் கருத்துக்கள் சில சமயம் சர்ச்சையை கிளப்பி விடுகிறது. இதற்கு முன் அவர் பஞ்சாபிகளும், ஜாட் சமூகத்தினரும் அதிக உடல் பலம் கொண்டவர்களாயினும் அவர்களை விட குறைந்த உடல் பலம் கொண்ட மேற்கு வங்கத்தின் பெங்காலிகள் புத்திசாலிகள் எனவும் கூறியக் கருத்து சர்ச்சையானது.

இதன் மீது கருத்து கூறிய அரசியல் தலைவர்கள் மாநில முதல்வராக இருப்பவர்கள் மிகவும் யோசித்து கருத்துக்களை கூற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT