தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலை பாகிஸ்தான் குறி வைப்பதாக டெல்லியில் கைதான ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 6-ல் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த இதாயத்துல்லா மல்லீக் சிக்கினார். விசாரணையில், இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் (75) மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக வியூகம் அமைக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசக அலுவலகம் அமைந்த பகுதியின் படக்காட்சிகள் அடங்கிய வீடியோ அவரிடமிருந்து கிடைத்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி காவல் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "அஜித் தோவலை இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றே பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் கருதுவதாக இதாயத்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டெல்லியில் கைதான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த இரண்டு காஷ்மீர் இளைஞர்களும் அஜித் தோவலை குறி வைத்தே அனுப்பப்பட்டவர்கள்" என்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் பவுரி கடுவால் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் தோவல். 1968-ம் ஆண்டு கேரள மாநிலப் பிரிவின் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
பஞ்சாப் பொற்கோயிலை கைப்பற்றிய சீக்கிய தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் ஏஜெண்டை போல் மாறுவேடத்தில் ஊடுருவி, முக்கிய தகவல்களை பாதுகாப்புப் படையினருக்கு அளித்தார். 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களிடம் காந்தஹாரில் பேச்சுவார்த்தை நடத்திய மூவரில் ஒருவராகவும் அஜித் தோவல் இருந்துள்ளார்.
கடந்த 2005-ல் மத்திய உளவுத்துறை இயக்குநராக இவர் ஓய்வு பெற்றார். இதற்கு முன்பாக சுமார் 7 வருடங்கள் பாகிஸ்தானில் தங்கி அதன் ஐஎஸ்ஐ அமைப்பை அஜித் தோவல் உளவு பார்த்துள்ளார்.
இதுபோன்ற அவரது செயல்களாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் பற்றி தோவல் நன்கு அறிந்திருப்பதாலும் பாகிஸ்தானில் ‘இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என அஜித் தோவல் அழைக்கப்படுகிறார்.
இவரது முக்கியத்துவம் கருதியே 2014-ல் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, ஓய்விலிருந்த தோவலை அழைத்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியமர்த்தினார். தற்போது அஜித் தோவலுக்கு பாகிஸ்தானால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை கருதி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.