நாடாளுமன்றத்தை தொந்தரவு செய்வதற்காக மக்கள் அளித்த தீர்ப்பாக பிஹார் தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழத்தி, ஆளும் நிதிஷ்குமாரின் மகா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பேசப்பட்ட நிலையில், பாஜகவின் இந்த தோல்வி, தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விரைவில் கூடவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, பல்வேறு முக்கிய விவகாரங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் பிஹார் தேர்தல் முடிவு குறித்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் வெங்கையா நாயுடு கூறும்போது, ‘‘பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். நாடாளுமன்றத்தை தொந்தரவு செய்வதற்கான தீர்ப்பாக, இந்த தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் கருதக்கூடாது.
அவ்வாறு கருதினால், மக்கள் அளித்த தீர்ப்பு கேள்விகுறியாகிவிடும். அதே போல் பிஹார் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் எதிரொலிக்கும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. இந்த தீர்ப்பு ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது. அம்மாநில மக்கள் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தெளிவாக இந்த தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர். ஆகவே, ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட அரசியலை, தேசிய அரசியலோடு இணைக்கக் கூடாது’’ என்றார்.