தன்னிடம் பிச்சை கேட்ட சிறுவனை காலால் எட்டி உதைத்த மத்தியப் பிரதேச மாநில பெண் அமைச்சர் குசும் மெதிலே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு சத்தீஸ்கர் மண்டல ஆர்எஸ்எஸ் தலைவர் அசோக் சொஹானி, போபால் நகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொதுமக்களிடம் அமைச்சர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பிச்சை கேட்ட சிறுவனை எட்டி உதைத்த அமைச்சர் மீது மத்தியப் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கடந்த 1-ம் தேதி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரான மெதிலே, பன்னா நகரில் நடைபெற்ற மத்தியப் பிரதேச நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, தன்னிடம் பிச்சை கேட்ட சிறுவனை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. இவரது இந்த செயலுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அத்துடன், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தன.