நிஹால் சிங் 
இந்தியா

பஸ் விபத்தில் சிக்கி போராடிக் கொண்டிருந்த 20 பேரின் உயிரை காப்பாற்றிய விவசாயிக்கு வீரதீர செயல் விருது

செய்திப்பிரிவு

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி உ.பி. அரசு பஸ் ஒன்று யமுனா விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது, பாலத்தில் இருந்து குறுகிய கால்வாய்க்குள் விழுந்து நொறுங்கியது. இதில் 29 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த நேரத்தில் துணிச்சலாக செயல்பட்டு பஸ் கதவு, ஜன்னல்களை உடைத்து 20 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார் நிஹால் சிங் (27). இவர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள சவுகான் பாகெல் கி தர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.

அந்த சம்பவத்துக்குப் பிறகு நிஹால் சிங் தனது பணிகளை வழக்கமாக செய்து கொண்டிருந் தார். இந்நிலையில், இந்திய அரசின் சின்னத்துடன் நிஹால் சிங்குக்கு ஒரு கடிதம் நேற்று வந்தது. அந்தக் கடிதத்தை உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பி இருந்தார். அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது. அதை மொழிபெயர்த்து சொல்ல கேட்டார் நிஹால் சிங். கடிதம் கொண்டு வந்தவர், கடிதத்தை படித்து அதில் இருந்த விவரத்தை கூறிய போது, நிஹால் சிங் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

அந்தக் கடிதத்தில், ‘‘பஸ் விபத்தில் சிக்கிய 20 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரதீர செயல் விருது (ஜீவன் ரக் ஷா பதக்) வழங்க உள்ளார். அதற்காக வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று உள்துறை செயலர் அஜய் கூறி யிருந்தார்.

அதை கேட்ட நிஹால் சிங் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். வீரதீர செயலுக்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் கணிசமான ரொக்கப் பரிசு ஆகியவற்றை குடியரசுத் தலைவர் சார்பில் உத்தர பிரதேச அரசு விரைவில் வழங்கும்.

SCROLL FOR NEXT