காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நேற்று தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்த ளித்து உபசரித்தார். அப்போது, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோ தாவை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி யதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இத்தொடரில், நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய வரி சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த மழைக்கால தொடரில் காங்கிரஸின் கடுமையான எதிர்ப்பால் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை. எனவே, நடப்பு கூட்டத்தொடரில் சுமுகமாக நிறைவேற்ற அரசு முயல்கிறது. இதைத்தொடர்ந்து தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி நேற்று அழைப்பு விடுத்தார்.
மோடியின் அழைப்பைப் பெற்ற மன்மோகன், சோனியா இருவரும் அதுகுறித்து ஆலோசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன், “இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் விவாதிக்கப் படும் பொருள் என்னவென்பது எங்களுக்குத் தெரியாது. தனது இல்லத்துக்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்தார். அவர் என்ன பேசுகிறார் என்பதைப் பார்ப்போம்” என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெங்கய்ய நாயுடு, “நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்த அரசு விரும்புகிறது. இந்த தேநீர் விருந்து ஆலோசனைக் கூட்டம் பலனளிக்கும் என நம்புகிறோம்” என்றார்.
முன்னதாக, “ஜிஎஸ்டி மசோ தாவை நிறைவேற்ற அனைவரிட மும் பேச பிரதமர் மோடி தயாராக உள்ளார்” என நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் சோனியா மற்றும் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜிஎஸ்டி மசோதா முக்கிய விவாதப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
மோடி பிரதமராக பதவியேற்ற பின் சோனியாவுடன் ஆலோசிப்பது இதுவே முதல் முறை.
ராகுல் கருத்து
இந்த தேநீர் விருந்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ஜிஎஸ்டி மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, பரவலான எதிர்ப்பு காரணமாகவே இந்த தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மோடி திட்டவட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக கடந்த இரு நாட்க ளாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதற்குப் பதில் அளித்து பிரதமர் மோடி மக்கள வையில் நேற்று பேசியதாவது:
நமது தேசத்தை கட்டமைத்ததில் எல்லா அரசுகளுக்கும் பிரதமர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இந்த நாடு வளர்ந்து செழிப்படைந்துள்ளது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டை கட்டி எழுப்பினர். சுதந்திர காற்றை சுவாசிக்கச் செய்த அவர்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
அரசர்கள், இளவரசர்களால் உருவாக்கப்பட்டதல்ல நமது நாடு. மக்களால் உருவாக்கப்பட்டது. நாட்டில் ஜனநாயகத்தை வலுப் படுத்தி அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது நமது அரசமைப்பு சட்டம்தான். தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் நலன்களை சட்டம் பாதுகாக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், பல்வேறு பாகுபாடுகள், இன்னல் களைச் சந்தித்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட இன்னல்களை மையப்படுத்தி சட்டத்தை வரையறுக்கவில்லை. அதுதான் அவரது பெருந்தன்மை.
‘முதலில் இந்தியா’ என்பதே எனது அரசின் மதம், அரசமைப்புச் சட்டம் புனித நூல் போன்றது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியே நாட்டில் ஆட்சி நடத்தப்படும். அனைத்து சமுதாய மக்கள், மதங்களைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பாரபட்சமின்றி பாடுபடும். இவ்வாறு மோடி பேசினார்.