கோலாலம்பூர் அருகே பெடாலிங் ஜெயாவில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் விவேகானந்தர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை இந்தியப் பண்பாடு செழுமையானது என்று கூறினார்.
சிலையை திறந்து வைத்து விவேகானந்தர் மற்றும் இவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி மோடி கூறும்போது, "வேதங்கள் முதல் விவேகான்ந்தர் வரை இந்தியப் பண்பாடு செழுமையானது, இந்தச் சிலை இந்நாட்டு மக்களுக்கு ஒரு அகத்தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன். மலேசியாவில் 20 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர்.
விவேகானந்தரை நாம் நமது இருதயம் மற்றும் ஆன்மாவில் குடிகொள்ளச் செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் என்பது ஒரு நபரின் பெயர் அல்ல, இந்தியாவின் ஆன்மா. அவர் உண்மையை அடையும் வழியைப் பின் தொடர்ந்து சென்றவர். அவர் குருவைத் தேடிச் செல்லவில்லை, அதேபோல்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் மாணவனைத் தேடவில்லை. உண்மையை அடையும் வழியே இருவரையும் ஒன்றிணைத்துள்ளது"
இவ்வாறு கூறியுள்ளார் மோடி. இவர் 13-வது தெற்காசிய நாடுகள் மாநாட்டிலும் 10-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் கடந்த சனியன்று கோலாலம்பூர் வந்தடைந்தார்.