நான் பாஜகவில் சேர்வதில் என்ன தவறு இருக்கிறது. அந்தக் கட்சியில் சேர்வதற்கு எனக்கு அழைப்பு ஏதும் அவசியம் இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்த தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி மாநிலங்களவையில் நேற்று பேசுகையில், “என் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க முடியாதவனாக என்ன செய்ய வேண்டும் என்று குழப்பத்தில் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். இங்கு என்னால் எதையும் கூற முடியாது. ஆதலால், நான் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினேஷ் திரிவேதி ராஜினாமா முடிவை அறிவித்த சில மணி நேரங்களில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா அளித்த பேட்டியில், “தினேஷ் திரிவேதி எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் சேரலாம். அவரை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தி சேனலுக்கு தினேஷ் திரிவேதி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கடந்த இரு மாதங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளார்கள். நீங்களும் தற்போது ராஜினாமா செய்திருப்பதால், பாஜகவில் இணையவீர்களா? என நிருபர் கேட்டார்.
அதற்கு தினேஷ் திரிவேதி பதில் அளிக்கையில், “எனக்கு பாஜகவில் சேர்வதற்கு அழைப்பு ஏதும் தேவையில்லை. பாஜகவில் உள்ள அனைவரும் எனக்கு நண்பர்கள்தான். பிரதமர் மோடி எனக்குச் சிறந்த நண்பர், அமித் ஷாவைப் பல ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். நான் எளிதாக பாஜகவுக்குப் போகலாம். பாஜகவில் சேர்கிறேன் என்று சொல்விட்டு அங்கு சென்று இணைந்து கொள்ளலாம். நாளை நான் பாஜகவில் இணைந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?
பாஜகவினர் என்னை வரவேற்றால் எனக்கு மகிழ்ச்சிதான். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜகவை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நாட்டுக்காகப் பல நல்ல செயல்களை, திட்டங்களைச் செய்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸில் கார்ப்பரேட் ஆதிக்கம் இருப்தாக குற்றம் சாட்டினீர்களே எனக் கேட்டதற்கு திரிவேதி பதில் அளிக்கையில், "திரிணமூல் காங்கிரஸ் கட்சியை நான், மம்தா பானர்ஜி, அஜித் பஞ்சா, முகுல்ராய் ஆகியோர் சேர்ந்துதான் உருவாக்கினோம். டெல்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுக்கவே பணமில்லாமல் போராடி இருக்கிறோம். ஆனால், இன்று கட்சியில் அந்த ஆத்மா இல்லை.
ஒரு ஆலோசகருக்கு ரூ.100 கோடி கொடுக்கிறார்கள். மறுபுறம் ஏழைகளுக்கான கட்சி என்று பேசுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியை அகற்ற மம்தாவுக்கு அப்போது எந்த விதமான அரசியல் ஆலோசகரும் தேவைப்படவில்லை.
மகாத்மா காந்திக்கு அரசியல் ஆலோசகர் தேவைப்படவில்லை. நான் அவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கவில்லை. ஆனால், அவர்களால் கட்சியைச் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், சொந்தம் கொண்டாடுகிறார்கள். கட்சியைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என நினைக்கிறார்கள்
மேற்கு வங்கத்தில் நடக்கும் கலவரங்கள், கட்சிக்குள் நடக்கும் ஊழல்கள் ஆகியவற்றைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாது. மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பீடம் போல் அமர்ந்திருக்க விரும்பவில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தை நான் கண்டித்தேன்.
ஆனால், என்னை ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசச் சொல்கிறார்கள். ஆனால், அது என்னுடைய மனதுக்கும், செயல்பாட்டுக்கும் சரியானது அல்ல. நான் செய்ய முடியாது எனத் தெரிவித்தேன். பிரதமர் மோடி நல்ல திட்டங்கள், செயல்கள் செய்தால் அதைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அதேநேரத்தில் தவறுகள் ஏதும் செய்தாலும் அதை நாம் சுட்டிக்காட்டி கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்'' என்று தினேஷ் திரிவேதி தெரிவித்தார்.