காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர், உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியுள்ளனர்.
மக்களவைத் தலைவர் அனுமதியின்றி, விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்துமாறு ராகுல் காந்தி கோரியது அவையை அவமானப்படுத்தும் செயல். ஆதலால் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
மக்களவையில் கடந்த வியாழக்கிழமை பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 200 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த அரசு அவர்களுக்காக அஞ்சலி செலுத்தவில்லை, ஆனால் விவசாயிகளுக்காக 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்துவோம் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
மக்களவையின் சமீபத்திய வரலாற்றில் மக்களவைத் தலைவரிடம் அனுமதி பெறாமல் அவையில் உள்ள உறுப்பினர்கள் மவுனஅஞ்சலி செலுத்தியது இதுவாகத்தான் இருக்கும்.
இதையடுத்து, பாஜக எம்.பி.க்கள் சஞ்சய் ஜெய்ஸ்வால், ராகேஷ் சிங், பி.பி. சவுத்ரி ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை மக்களவைத் தலைவரிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக எம்.பி. ஜெய்ஸ்வால் கூறுகையில் “ மக்களவைத் தலைவரின் அனுமதியின்றி, தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை எழுந்து மவுனஅஞ்சலி செலுத்துமாறு ராகுல் காந்தி கூறினார். அவைத்தலைவரையும், அவையையும் மீறி செயல்பட்ட ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.
ராகேஷ் சிங் நிருபர்களிடம் கூறுகையில் “ ராகுல் காந்தி அவையில் நடந்து கொண்டவிதம் அநாகரீகமானது. இது நாடாளுமன்றத்தையே அவமரியாதைக்குள்ளாக்கியுள்ளது. நாடாளுமன்ற விதிகளுக்கு முரணாக ராகுல் காந்தி நடந்துள்ளார். ஒட்டுமொத்த தவறான செயலாகும், தீவிரமான உரிமைறீல் பிரச்சினை” எனத் தெரிவித்துள்ளார்.