ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி :படம் ஏஎன்ஐ 
இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை: அறக்கட்டளை நிர்வாகி தகவல்

ஏஎன்ஐ


அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை வந்துள்ளது என்று அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.

அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகளை அறக்கட்டளை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறுகையில் “ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குகாக இந்த தேசமே நிதியுதவி வழங்கி வருகிறது. 4 லட்சம் கிராமங்களை அடைந்து, 11 கோடி குடும்பங்களைச் சந்தித்து நன்கொடை பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளோம்.

கடந்த மாதம் 15-ம் தேதி முதல் பிப்ரவரி 27-ம் தேதி வரை நன்கொடை பெறும் பயணத்தை தொடங்கியுள்ளோம். இந்த நன்கொடைபெறும் பயணத்தில் ஒரு பகுதியாக நான் தற்போது சூரத் நகரில் இருக்கிறேன்.

மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். 492 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,511 கோடி நன்கொடையாக அறக்கட்டளை திரட்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT