மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம் 
இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு இன்றுடன் முடிகிறது: மக்களவை காலையில் கூடுகிறது: நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கிறார்

பிடிஐ


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிகிறது. வழக்கமாக மாலை தொடங்கும் மக்களவை, இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இந்த முறை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடக்கவில்லை. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

இருஅமர்வுகளாக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து குடியுரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன.

மாநிலங்களவை 2 நாள் முன்பாக அதாவது 15-ம் தேதி முடிவதற்கு பதிலாக நேற்று(12ம்தேதி) முடித்துக்கொள்ளப்பட்டது. மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்தார். மாநிலங்களவையின் அடுத்த அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கும்

.மக்களவை வழக்கமாக மாலை 4 மணிக்கு தொடங்கும். ஆனால், இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று அறிவித்தார். இன்று காலை தொடங்கும் மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். இன்றைய கூட்டம் மாலையில் முடிந்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்துவிடும்.அதன்பின் மார்ச் 8-ம் தேதி 2-வது அமர்வு கூடும்.

இன்றைய கூட்டத்தொடரில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என பாஜக தலைமையகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT