படித்த இளம் தலைமுறையினர் கலப்புத் திருமணம் புரிவதன் மூலம் நாட்டில் ஏற்படும் சாதிக் கலவரங்கள் மற்றும் வகுப்பு மோதல்களைத் தடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு வந்த ஒரு எம்பிஏ படித்த மாணவி ஒரு எம்டெக் முடித்த துணை பேராசிரியரை திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கில் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உறவினர் போலீஸில் அளித்த புகாரின் அடிப்படையில், கணவரை விட்டுவிட்டு பெற்றோருடன் சென்றுவிடுமாறு இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்து, அந்த பெண் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார்.
படித்த இளம் ஆண்களும், பெண்களும் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வைக்கும் ஒரே சாதியிலான திருமணங்களைவிட மாற்று சாதியிலிருந்து தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதன் மூலம் சாதிக் கலவரங்கள், வகுப்பு மோதலைத் தடுக்க முடியும் என்று நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
சாதி ஒழிப்புக்கு சிறந்த வழி கலப்புத் திருமணங்களே என சட்ட மேதை பி.ஆர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதை தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, ரத்தத்தில் தனது உறவினர் என்ற பந்தம் ஏற்படும்போதுதான் கலவரங்கள் குறையும் என குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழல் உருவாகாதவரை, தனி மனித, தன் சமூகம் சார்ந்த என்ற மனப்போக்கே மேலோங்கியிருக்கும். இவ்விதம் மேலோங்கும்போது சாதி ஒழிப்பு சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.